Tuesday, April 30, 2024

ஸ்ரீரங்கத்தில் சித்ரா பெளர்ணமி--கஜேந்திர மோட்சம் உற்சவம் !

 ஸ்ரீரங்கத்தில் சித்ரா பெளர்ணமி--கஜேந்திர மோட்சம் உற்சவம் !
    🌕🐘🙏🌕🐘🤚🌕🐘🤚

"மீனமர் பொய்கை நாண் மலர்
கொய்வான்,வேட்கையினோடு சென்று இழிந்த-
கானமர் வேழம், கை எடுத்து அலறக்,கரா வதன் காலினைக் கதுவ,
ஆனையின் துயரம் தீரப், புள்ளூர்ந்து சென்று நின்று, ஆழி தொட்டானை,
தேனமர் சோலை மாட மாமயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே !"
 (பெரிய திருமொழி 2-3-9)

--"மீன்கள் அமர்ந்ததொரு தடாகத்திலே புதிய புஷ்பங்களைப் பறிக்க வேணும், என்கிற விருப்பத்தோடு போய் இறங்கின காட்டில் திரியும் கஜேந்திரன், தனது துதிக்கையை உயரத் தூக்கிக் கூச்சலிடும்படியாக, முதலையானது அந்த யானையின் காலைத் கௌவிக் கொள்ள, அந்த யானையினுடைய மனவருத்தம் தீரும்படி பெரிய திருவடியை வாகனமாகக் கொண்டு பொய்கைக் கரையிலே எழுந்தருளி அங்கே நின்று திருவாழியை அந்த முதலையின்மீது பிரயோகித்த பெருமானை, தேன்மாறாத சோலைகளையுடைய மாடம் மா மயிலை திருவல்லிக்கேணி கண்டேன்."

ஸ்ரீரங்கத்தில் சித்ரா பெளர்ணமி அன்று நம்பெருமாள் தென் திருக்காவேரிக்கு எழுந்தருளி,காவிரி ஆற்றில் யானை கஜேந்திரனுக்கு மோட்சம் அளிக்கும் வைபவம் விமரிசையாக நடைபெறுகிறது
இந்த உற்சவம் திருவூறல் உற்சவம் என்றும் அழைக்கப் படுகிறது.

இந்த ஆண்டு சித்ரா பெளர்ணமியான நேற்று காலை(23/04) நம்பெருமாள் காலை 7 மணிக்குப் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 10.30க்கு தென் திருக்காவேரிக் கரையில் உள்ள அம்மா மண்டபத்தில் எழுந்தருளினார்.
பகல் 12 மணியிலிருந்து 2 மணி வரை திருமஞ்சனம் கண்டருளி பக்தர்களுக்குச் சேவை சாதித்தார்.

1.கஜேந்திர ஆனைக்கு  மோட்சம் அருளும், குட பால ஆனை !

  🙏🐘🐘🤚🐘🐘🤚🐘🐘🤚🙏

தென் ஆனாய்(திருமாலிருஞ் சோலை அழகர்),
வட ஆனாய் (திருவேங்கடவர்),
குட பால ஆனாய்(மேற்கில் திருவரங்கர்)
குணபால மத ஆனாய்(கிழக்கில் திருக்கண்ணபுரம் செளரிராஜர்)-- இமையோர்க்கு என்றும் முன்னானாய்,
பின்னானார் வணங்கும் சோதி !
திரு மூழிக் களத்தனாய் முதலானாயே !(திருநெடுந்தாண்டகம்-10)

மாலை 6 மணிக்குப் புறப்பட்டு காவிரிக்கரைக்கு எழுந்தருளி,காவிரி ஆற்றில் நின்று கொண்டிருந்த பெரிய கோயில் யானை ஆண்டாளுக்கு அநுக்ரஹம் செய்தார்.யானையின் சிரசில்,அர்ச்சகர்கள் நம்பெருமாளின் திருவடிகளான ஸ்ரீ சடகோபம் சாதித்தனர்.யானையின் நெற்றியில் பெருமாள் அருளித்தந்த சந்தனம் சாத்தப்பட்டது. அதன்பின் நம்பெருமாள் அம்மா மண்டபம் திரும்பினார்.அங்கு மங்கள ஆரத்தி ஆன பின் பொதுமக்கள் சேவை முடிந்து இரவு 8.15க்குப் புறப்பட்டு ஆஸ்தானம் அடைந்தார்.

2.நம்பெருமாள் நடையழகுக்கு ஈடாகப் பாடிய நல்லரையர்:
   🔔🔊🕪🕩🔉📢📣📯🕭
ஒரு திருவூறல் உற்சவத்தில்--சித்ரா பௌர்ணமியன்று,தென்திருக்காவேரியிலிருந்து,புறப்பட்ட போது,(ஸமரபூபாலன் என்னும் கேடயம் போன்ற வாகனத்தில்)
அரையரிடம்,"நம் நடையழகுக்கு ஈடாகப் பாடும்" என்று நியமித்தார்.அரையர் அவ்வாறே நமபெருமாளை இசையில் ஏத்திக் கொண்டு கோவில் ஆஸ்தானம் வந்தார்.2.5 கி.மீ.தூரம் பின்னோக்கி
(பின்புறம் திரும்பாமல்),
நம்பெருமாள் நடையழகுக்குத் தக்க, தாள இசையுடன் பாடிக் கொண்டு வந்தார்!!.இந்த வைபவம், இன்றும் ஒவ்வொரு சித்ரா பௌர்ணமியன்றும் நடைபெறுகிறது.

3.கஜேந்திர மோட்சம் உணர்த்தும் தத்துவம் :
    🙏👣🙏👣🙏👣🙏👣🙏👣🙏
கஜேந்திராழ்வான் எம்பெருமான் திருவடிகளுக்குச் சாற்றுகைக்காகத் தாமரை மலர் பறித்த போது,முதலை கஜேந்திரன் காலைக் கவ்வித் துன்புறுத்தியது.அது போல,
எம்பெருமான் மீது பக்தி கொண்டுள்ள  நம்மை ஐம்புலன்கள்(கண்,வாய்,மூக்கு,
காது,மெய்(உடம்பு) ஆகியவை தங்கள் ஆயுதங்களான காட்சி,சுவை/வாக்கு,மணம், ஒலி,ஸ்பர்ஸம்  ஆகியவற்றின் மூலம்  அடிமைப் படுத்தி) என்னும் முதலை கவ்வித் துன்புறுத்துகிறது.
கஜேந்திரன்"நாராயாணா! ஓ!மணி வண்ணா!! நாகனையாய்!! வாராய்! என் ஆரிடரை நீக்காய்"என்று  ஓலமிட்ட போது,எம்பெருமான் ஓடோடி வந்து காப்பாற்றியது போல,நாமும் எம்பெருமான் திருவடிகளில் சரணடைந்து,அவன் நாமங்களைப் பக்தியுடன் சொன்னால் கடுக வந்து,
 அந்தக் கொடிய ஐம்புலன் பிடியிலிருந்து,நம்மை விடுவித்து உய்விப்பார்

No comments:

Post a Comment

சிவ தாண்டவ ஸ்தோத்திரம் உருவான கதை

 சிவ தாண்டவ ஸ்தோத்திரம் உருவான கதை சிவ தாண்டவ ஸ்தோத்திர பாடலுக்கு பின்னால் இருக்கும் வரலாறு… . ராவணன் ஆண்டு வந்த இலங்கைக்கு சிவபெருமானை அழைத...