Thursday, February 22, 2024

திருக்கோளூர்🙏 ஸ்ரீவைத்தமாநிதி பெருமாள் குபேரனுக்கு படியளந்த நாள்

 🙏திருக்கோளூர்🙏 ஸ்ரீவைத்தமாநிதி பெருமாள்   *குபேரனுக்கு படியளந்த நாள் (மாசிமாதம் 9ம் தேதி) 


🙏🌹🙏 திருக்கோளூர் அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில்  நவதிருப்பதிகளில் எட்டாவது திருப்பதியாகவும் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்தியேழாவது திவ்ய தேசமாகவும் நவக்கிரகங்களில் செவ்வாய் ஸ்தலமாகவும் இத்திருத்தலம் அமைந்துள்ளது.


புராண சிறப்பு:
முற்காலத்தில் வடதிசைக்கு அதிபதியாகிய குபேரன் அளகாபுரியில் வசித்து வந்தார் அவர் மிகச் சிறந்த சிவன் பக்தர். ஒரு நாள் சிவபெருமானை நேரடியாக தரிசிக்க கைலாயத்தை அடைந்தார். 

அப்பொழுது சிவபெருமானுடன் தனித்திருந்த பார்வதிதேவி மிகுந்த அழகுடன் காண விளங்கினார்.

தனத்திற்கு அதிபதியாகிய குபேரன் தேவதேவியரின் தனிமையை உணராது தரிசிக்க சென்ற போது அதிரூபமாகிய இவள் யார் என்று கௌரியை உற்று நோக்குகின்றார். இதை கண்ட உமையவள் கோபம் கொண்டு ‘நீர் கெட்ட எண்ணத்துடன் என்னை பார்த்தீர் எனவே உமது ரூபம் விகாரமடையக்கடவது, நவநிதிகளும் உம்மை விட்டகலும், ஒரு கண்ணையும் இழப்பீர்' என சபித்துவிடுகிறார். 

குபேரன் மிகவும் மனவருத்தமடைந்து சிவபெருமானை துதித்து நடந்த விஷயத்தை தெரிவிக்கிறார். சிவபெருமானும் திருமாலை சரணடையுமாறு கூறுகிறார்.


குபேரன் தன் சங்க நிதி பதும நிதி உட்பட நவநிதிகளை இழந்து ஆதரிப்பார் யாருமின்றி பூலோகம் வந்தடைந்து பொருநையாற்றின் தென்கரையில் புனித நீராடி பகவானை குறித்து கடும் தவம் செய்தார். 

குபேரனின் தவத்திற்கு இரங்கிய பகவான் மாசி மாதம் சுக்லபட்சம் வளர்பிறை துவாதசி திதி அன்று தாமிரபரணி நதி தீர்த்தத்தில் நீராடச் செய்து சாபம் நீக்கி அருள் புரிந்தார்.


வைத்தமாநிதி என்ற திருநாமத்துடன் நவநிதிகளின் மீது சயனம் கொண்டு அவற்றை காப்பாற்றி அருளினார். குபேரனும் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று தன் இருப்பிடம் வந்தடைந்தார்.

இலக்கியச் சிறப்பு:
பன்னிரெண்டு ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வார் அவதரித்த திருத்தலமாகும். நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமாகும்.


தனிச்சிறப்பு:

நவதிருப்பதிகளில் எட்டாவது திருப்பதியாகவும் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்தியேழாவது திவ்ய தேசமாகவும் நவக்கிரகங்களில் செவ்வாய்த் தலமாகவும் இத்திருத்தலம் அமைந்துள்ளது. மேலும் செல்வநிலையில் சிறப்படையவும் இழந்த செல்வங்களை மீண்டும் திரும்பப் பெறுவதற்கும் இத்திருத்தலத்திற்கு வந்து வழிபடுவது சிறப்பு.
ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டுள்ள பெருமாள் மரக்காலை (நெல் அளக்க பயன்படும் மரத்தாலான பாத்திரம்) தலைக்கு வைத்து படுத்திருப்பது ஆதனூருக்கு அடுத்து இத்திருத்தலத்தில் மட்டுமே ஆகும்.



அமைவிடம்:
திருநெல்வேலி-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஆழ்வார் திருநகரியிலிருந்து மூன்று கிலோமீட்டார் தொலைவில் அமைந்துள்ளது. 

திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூரிலிருந்து போக்குவரத்து வசதி உள்ளது.



இறைவன் : அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள்
இறைவியர் : அருள்மிகு குமுதவல்லி
அருள்மிகு: கோளூர்வல்லி
தீர்த்தம்  : குபேர தீர்த்தம்
தலவிருட்சம் : புளிய மரம்
ஆகமம்  : வைகாநச ஆகமம்
விமானம்  ஸ்ரீகர விமானம்


சிறப்பு செய்தி:

குபேரன் தான் இழந்த செல்வத்தை பரமனைப் போற்றி மீண்டும் பெற்ற நாளாக தல வரலாற்றில் கூறப்படுவதாது, 

மாசி மாதம் சுக்லபட்சம் வளர்பிறை துவாதசி திதி அன்று என்பதாகும்.
இந்த நாள் இந்த வருடத்தில் புதன்கிழமை 21/02/2024. செல்வ வளம் பெற விரும்புபவர்களும் தாங்கள் இழந்த செல்வத்தை மீண்டும் பெற விரும்புபவர்களும் *அன்றைய  தினம் இத்தலத்திற்கு வந்து பெருமாளை வழிபடுவது சிறப்பு.
ஸ்ரீராமஜெயம்

Monday, February 19, 2024

முதல் அவதாரம் நடந்த புண்ணிய தலம் | திருமாலின் பத்து அவதாரங்கள் | தசாவதாரம்

 முதல் அவதாரம் நடந்த புண்ணிய தலம்

 


மகா விஷ்ணு ஒவ்வொரு யுகத்திலும் தசாவதாரம் எடுத்திருப்பதை புராணங்களில் படித்து இருப்பீர்கள்
இந்த ஊரில் வேதவல்லி சமேத வேதநாராயண சாமி அருள் பாலித்து வருகிறார்.
மகா விஷ்ணு ஒவ்வொரு யுகத்திலும் தசாவதாரம் எடுத்திருப்பதை புராணங்களில் படித்து இருப்பீர்கள்.

ஒவ்வொரு அவதாரத்தின் பின்னணியிலும் ஒரு வரலாற்று நிகழ்வு அடங்கி இருக்கும்.

அதை பிரதிபலிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் எண்ணற்ற வைணவ தலங்கள் உள்ளன.

அந்த வைணவ தலங்களில் மிகச் சிறப்பானவற்றை 108 திவ்ய தேசங்களாக நமது முன்னோர்கள் வகுத்து உள்ளனர்.

இந்த திவ்ய தேசங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பு கொண்டவை.

அந்த வகையில் தசாவதாரம் நிகழ்ந்த இடங்களாக கருதப்படும் புண்ணிய தலங்கள் உயர்ந்த இறை ஆற்றல் கொண்டவை.

இதில் மகா விஷ்ணுவின் முதல் அவதாரம் நிகழ்ந்த இடம் நாகலாபுரம் ஆகும்.

தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் ஊத்துக்கோட்டைக்கு மிக அருகில் நாகலாபுரம் உள்ளது.

இந்த ஊரில் வேதவல்லி சமேத வேதநாராயண சாமி அருள் பாலித்து வருகிறார்.

இந்த தலத்தில்தான் தசாவதாரத்தின் முதல் அவதாரமான மச்ச அவதாரம் நிகழ்ந்ததாக கருதப்படுகிறது.

பெருமாள் மீன் வடிவமெடுத்து கடலுக்குள் சென்று வேதங்களை மீட்டு வந்ததன் பின்னணியில் இந்த அவதார கதை அமைந்துள்ளது.

ஆனால் நாகலாபுரம் பகுதியில் கடல் எதுவும் கிடையாது.

அங்கிருந்து பழவேற்காடு சுமார் 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

எனவே இந்த அவதாரம் நிகழ்ந்த போது நாகலாபுரம் பகுதி கடலாக இருந்திருக்கலாம் என்றும்,

நாளடைவில் கடல் பின்வாங்கியதால் ஊர்கள் தோன்றி இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

நாகலாபுரத்தில் அமைந்துள்ள வேதநாராயண சுவாமி ஆலயம் முதல் அவதாரம் நிகழ்ந்த தலம் மட்டுமின்றி மேலும் பல்வேறு சிறப்புகளை கொண்டது.

ஆகம அடிப்படையில் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஆலய அமைப்பு பக்தர்களுக்கு புதிய தகவல்களை சொல்லும் வகையில் அமைந்துள்ளது.

சென்னையில் இருந்து இந்த ஆலயத்துக்கு மிக எளிதாக சென்று வரலாம்

Wednesday, February 14, 2024

அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீதேவி ,பூதேவி உடனுறை ஸ்ரீரங்கநாத பெருமாள் திருக்கோவில்.

 கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம் தருமே 

 

 

 

 


 

 

 

 

 

 

அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீதேவி ,பூதேவி உடனுறை ஸ்ரீரங்கநாத பெருமாள் திருக்கோவில்.

18.5 அடி நீளமும் 5 அடி உயரத்துடன் காணப்படும் பெருமான் இறைவனின் உருவம், சாளக்கிராம கல்லால் செய்யப்பட்டது.

திருவிழாக்கள்
ராம நவமி, பங்குனி உத்திரம், வைகுண்ட ஏகாதசி இங்கு கொண்டாடப்படுகிறது.

காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது.

ஆதிசேசன் என்படும் ஐந்து தலைகள் கொண்ட நாகப் பாம்புவின் மீது சயன திருக்கோலத்தில் ஸ்ரீரங்கநாத பெருமாள் பள்ளிக்கொண்ட நிலையில் காட்சியளிக்கிறார். இவரது நாபியின் மீது பிரம்மா உள்ளார். இறைவனின் பாதித்திற்கு அருகில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் இருவரும் அமர்ந்து, களைப்பில் இருக்கும் பெருமாளுக்கு சேவை செய்து கொண்டிருக்கின்றனர்பெருமாளின் திருவடியை சேவித்த நிலையில், தும்புறு மகரிஷியும், பக்த ஆஞ்சநேயரும் காட்சி தருகின்றனர்.

இந்த இடமானது தேவர்களால் தானமாக வழங்கப்பட்ட இடம் என்று கூறப்படுகிறது. இதனால் அந்த ஊர் தேவதானம் என்று அழைக்கப்பட்டது.

தேவதானம்.
( வட ஸ்ரீரங்கம் )

திருவள்ளூர் மாவட்டம்.

விறன்மிண்ட நாயனார் புராணம்

 🌺திரு அண்ணாமலை அகிலம் காக்கும் தந்தை  அண்ணாமலையார் மலர் பாதம்‌ சரணம் . ஈசனே எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் 🌹🌺

🙇06 விறன்மிண்ட நாயனார் புராணம்*

"விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க்கு அடியேன்"

"தேவாசிரிய மண்டபத்தில் வீற்றிருந்த சிவனடியார்களை வணங்காமையால் சுந்தரரையும் பகைத்த வேளாளர்."

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே”


சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுப்பே இது.

நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். 

தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்தத் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன்.

 நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மகாதேவர்.

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பார்வதியம்மை.

அவதாரத் தலம் : செங்கனூர்.

முக்தி தலம் : திருவாரூர்.

குருபூஜை நாள் : சித்திரை - திருவாதிரை.

"திருவார் பெருமை திகழ்கின்ற தேவாசிரியனிடைப் பொலிந்து
மருவா நின்ற சிவனடியார் தம்மைத் தொழுது வந்து அணையாது
ஒருவாறு ஒதுங்கும் வன்தொண்டன் புறகு என்று உரைப்பச் சிவனருளால்
பெருகா நின்ற பெறும் பேறு பெற்றார் மற்றும் பெற நின்றார்."

பாடல் விளக்கம்:


மங்கலம் பொலிந்து நிற்கும், பெருமை மிக்க தேவா சிரியன் என்னும் காவணத்தில் சிவப்பொலிவு ததும்ப நிற்கும், சிவபெருமானின் அடியவர்களைப் புறத்தே வணங்கிச் செல்லாது, இவ்வடியவர்க்கு அடியனாகும் நாள் எந்நாளோ? என அகத்து அன்பு செய்து, ஒருவாறாக ஒதுங்கிச் செல்லும் நம்பியாரூரர் இத்திருக் கூட்டத்திற்குப் புறகு என்று சொல்ல, சிவபெருமான் திருவருளால் பெருகி நிற்கும் பெரிய பேற்றினைப் பெற்றுக் கொண்டவர். மேலும் சிவபெருமானையும் அவ்வாறு "புறகு" என்று கூறும் பேறும் பெற்றவர்.

திருச்செங்குன்றூர் நீர் வளமும், நில வளமும், மழை வளமும், குடி வளமும், முடி வளமும், மற்றெல்லாப் பெருவளங்களையும் தன்னகத்தே கொண்ட மலைநாடு! இம்மலை நாட்டைச் சேரநாடு என்றும் கூறுவர் சிலர். இம்மலைநாடு புராணச் சிறப்பு மிக்கப் பழம்பெரும்பதி. இம்மலைநாடு தோன்றுவதற்குக் காரணமாக இருந்தவர் பரசுராமர். சிவபெருமானை வேண்டிப் பெரும் தவம் புரிந்து பரசு என்ற மழுவாயுதத்தைப் பெற்றவர் பரசுராமன். இவரது தந்தையாகிய ஜமதக்கினி முனிவர், மன்னர் குலத்தினரால் கொலை செய்யப்பட்டார். பரசுராமர் உருத்திரம் பொங்க மழுவாயுதத்தோடு மன்னர் குலத்தைப் பழிவாங்கப் புறப்பட்டார். மன்னர் குலத்தை இருபத்தோரு தலைமுறைக்குப் பழி வாங்கி வதைத்தார்.

முடிவேந்தர்களின் செங்குருதியிலே தந்தைக்குச் செய்ய வேண்டிய பிதிர்கடனைக் கழித்தார். அதன் பிறகு சினம் தணிந்து அமைதி அடைந்த பரசுராமர், கடல் சூழ்ந்த இப்பரந்த நிலவுலகத்தைக் காசிபர்க்குத் தானம் செய்து விட்டு மேற்குக் கடலை நோக்கிப் புறப்பட்டார். மேற்குக் கடலை அடைந்த பரசுராமர் தமது தபோவலிமையால், மழுவாயுதத்தைப் பயன்படுத்திக் கடல் நீரை விலகச் செய்து, மலைநாடு என்னும் ஒரு திருநாட்டைத் தோற்றுவித்தார். இம்மலைநாட்டில், அலை கடலிலிருந்தும், சோலைக் கரும்பிலிருந்தும், மூங்கில்களிலிருந்தும், யானைத் தந்தங்களிலிருந்தும் பற்பல வகைகளில், பற்பல விதமான முத்துக்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும். இத்தகைய விலை உயர்ந்த முத்துக்களை பாவையர்களின் புன்சிரிப்பு முத்துக்களோடு முறைபடக் கோர்க்கின்ற சிறப்புச் சேர நாட்டுப் பெண்மணிகளுக்கே உரியதாகும்.

இவ்வாறு வரலாற்றுப் பெருமை மிக்க - புராண சிறப்புமிக்க மலைநாட்டிலே, மிக்கச் சிறப்புடன் விளங்கும் தலங்களிலே செங்குன்றூரும் ஒன்றாகும். மண்மடந்தையின் கமலமலர் வதனம் போன்று ஒளிவிடும் செங்குன்றூர்ப் பதியிலே, உழவுத் தொழிலில் வேளாளர் குடி வல்லமை பெற்றிருந்தது. அந்த வேளாள மரபிலே இறைவனின் திருவருளால் அவதாரம் செய்தார் விறல்மிண்டர். இவ்வடியார், திருநீறும், கண்டிகையும் பூண்டு, நதியும், மதியும், பாம்பும் புனைந்த வேணியரின் செஞ்சேவடிகளை வணங்கி வழிபட்டு வந்தார். அரனாரிடம் பேரன்பு பூண்டிருந்தாற்போல், அரனார்தம் அடியார்களிடமும் அளவிட முடியாத அளவிற்குப் பேரன்பும், பெருமதிப்பும் கொண்டிருந்தார் அடியார். அடியார்களைப் பற்றி எவராகிலும் சற்று, மட்டு மரியாதை இன்றி, தரக்குறைவாகப் பேசினால் போதும், அக்கணமே அவர்களையும், அவர்களைச் சார்ந்தவர்களையும் தண்டிப்பார். அத்தகைய நேரங்களில் விறல்மிண்டரது பக்தி வீரமாக மாறிவிடும்.

விறல் என்ற சொல்லிற்கே வீரம் என்பது தான் பொருள். விறல்மீண்டார் என்ற பெயரே, இவர்க்கு வீரம் பற்றிய விளக்கமாக வந்து அமைந்துவிட்டது. அஞ்சா நெஞ்சமும், அறநெறி உள்ளமும் படைத்த விறல்மீண்டர், அடிக்கடி எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் ஆலயங்கள் தோறும் சென்று இறைவழிபாடு செய்து வருவது வழக்கம். ஆலயங்கட்டுச் சென்று வரும் இவ்வன்பர், ஆன்றோர் மரபு ஒழுக்கப்படி, முதலில் சிவனடியார்களைத் தொழுது வழிபட்டு, அவர்களது அருளைப் பெற்ற பின்னர் தான், ஆலயத்துள் எழுந்தருளியிருக்கும் பெருமானை வணங்குவார். இங்ஙனம், சிவத்தலங்கள் தோறும் சென்று, ஆங்காங்கேயுள்ள தொண்டர்களைத் தொழுவதும் திருசடையானைத் சேவிப்பதுமாக தலயாத்திரை நடத்திக் கொண்டுவந்த இவ்வடியார், சிறப்புமிக்கத் திருவாரூரை வந்தடைந்தார்.

தேவாசிரிய மண்டபத்திலே குழுமியிருந்த அடியார்களை வணங்கி நின்று தாமும் அவர்களுள் ஒருவராய்த் திகழ்ந்தார். இத்தருணத்தில் ஓர் நிகழ்ச்சி நடந்தது. வழக்கம் போல் சுந்தரமூர்த்தி நாயனார் புற்றிடங்கொண்ட நாதரை வணங்கி வழிபட வந்தார். அவர் அடியார்களை மனத்தால் வணங்கியவாறு, வேறு புறமாக ஒதுங்கியபடியே உள்ளே செல்ல அடி எடுத்து வைத்தார். இதனைக் கவனித்த விறல்மிண்டர், சுந்தரரை தவறாக எண்ணினார். சுந்தரரின் மனப்பக்குவத்தை அவர் எவ்வாறு அறிய இயலும்! இறைவனை வழிபடுவது எளிது. அடியாரை வழிபடுவது அரிது. அடியார்களை வணங்குவதற்குத் தக்க தகுதியும், பக்தியும், அன்பும் இருத்தல் வேண்டும். அஃது தமக்கு இல்லாமற் போயிற்றே! அடியார்களைப் பேணும் பேற்றினைத் தாம் பெறவில்லையே என்ற மனத்துடன், அடியார்களை மனத்தால் மட்டுமே வழிபட்டு, விலகிச் செல்வதை சுந்தரமூர்த்தி நாயனார் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இத்தகைய சுந்தரரின் உள்ளத் தூய்மையினை உணராத விறல்மிண்டர் அவர்மீது சினங் கொண்டார். சுந்தரரது செவிகளில் விழுமாறு, முதலில் வணங்கத்தக்க தேவாதி தேவர்கள் இங்கிருப்பதை மறந்துவிட்டு அங்கு செல்கின்றாரே, என்ன பயன்? வன்றொண்டான் அவ்வடியார்களுக்குப் புறம்பானவன். அவனை வலிய ஆட்கொண்ட வீதிவிடங்கப் பெருமானும் இவ்வடியார்களுக்குப் புறம்பானவன் தான் என்று கடுமையாகச் சொன்னார். விறல்மிண்டர் மொழிந்ததைக் கேட்ட சுந்தரமூர்த்தி நாயனார் விறல்மிண்டர் அடியார்களிடத்துக் கொண்டுள்ள பக்தி எத்துணைச் சிறப்புடையது என்பதை எண்ணிப் பெருமையுற்றார். எம்பெருமானின் திருமுன் வீழ்ந்து வணங்கி, அடியார்களுக்கும் அடியானாகும் பேரின்ப நிலையைத் தமக்குத் தந்தருள வேண்டும் என்று இறைஞ்சி நின்றார்.

அப்பொழுது இறைவன், தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று அடி எடுத்துக் கொடுக்க, விண்ணும், மண்ணும் உய்ய, திருத்தொண்டத் தொகை என்னும் திருப்பதிகத்தினைப் பாடித் திருகூடத்தைத் தொழுது அணைந்தார் சுந்தரமூர்த்தி நாயனார். திருத்தொண்டர்களின் பெருமையைச் சொல்லும் திருத்தொண்டத் தொகை இல்லாவிடில் நாயன்மார்களின் பெருமையைச் சொல்லும் பெரியபுராணமே தோன்றியிருக்காது. சுந்தரர் அடியார்கள் மீது கொண்டுள்ள பக்தியின் உயர்வை எண்ணிப்பார்த்து விறல்மிண்டர் பேரின்பம் பூண்டார். சைவ சமய நெறியைப் பாதுகாத்துத் திருத்தொண்டு பல புரிந்து வாழ்ந்து வந்த விறல்மிண்டர், சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டத் தொகையைக் கேட்டு, எல்லையற்ற பெருமகிழ்ச்சி பூண்டார். உலகம் உய்யவும் மக்கள் எல்லாம் கடைத்தேறவும், சைவம் தழைத்தோங்கவும், சுந்தரருடைய திருவுள்ளம் திருத்தொண்டர்களிடத்திலே பதிந்திருந்தது என்பதை உணர்ந்த விறல்மிண்டர் களிப்பெய்தினார்.

திருக்கூட்டத்தை வணங்காது செல்லுகின்ற வன்றொண்டன் அடியார்களுக்குப் புறது; அவ்வன்றொண்டனை ஆட்கொண்ட பரமசிவனும் புறகு என்று சுந்தரமூர்த்தி நாயனார் செவிகளில் விழுமாறு விறல்மிண்டர் கூறியிராவிடில் திருத்தொண்டத் தொகையே பாடப்பட்டிருக்காது எனலாம். இந்த நாயனாரைப் பற்றி மற்றொரு சம்பவமும் சொல்லப்படுகிறது. சுந்தரர் மீது கோபம் கொண்ட அடிகளார் சுந்தரரையும் வெறுத்தார். திருவாரூரையும் வெறுத்தார். திருவாரூர் எல்லையைத் தீண்டுவதில்லை என்று தமக்குள் ஒரு திடசங்கல்பம் பூண்டார். அத்துடன், அந்த அடியார் மற்றொரு வைராக்கியத்தையும் கடைப்பிடித்து வந்தார். தமது இல்லத்திற்கு விருந்திற்கு வரும் அன்பர்களிடம், எந்த ஊரில் இருந்து வருகிறீர்கள் என்று ஒரு கேள்வி கேட்பார். அவர்கள் திருவாரூர் என்று சொன்னால் உடனே அடிகளார், அடுத்துள்ள கொடுவாளை எடுத்து விருந்துண்ண வந்தவரின் காலைத் துண்டிப்பார்.

இதற்காகவே அவரது மனைவியார் வீடு தேடிவரும் அன்பர்களிடம் அடியாரின் மனோநிலையைக் கூறி ஊரைப்பற்றி விசாரித்தால் திருவாரூர் என்று மட்டும் சொல்லாதீர்கள் என்று முன்கூட்டியே எச்சரிக்கை செய்து விடுவாள். இதனால் அடியார்களின் கால்கள் தப்பின. திருவாரூரில் கோவில் கொண்டுள்ள தியாகேசப் பெருமான், தனது அன்புத் தொண்டனை ஆட்கொண்டருளத் திருவுள்ளம் கொண்டார். எம்பெருமான் சிவனடியார் போல் வேடம் பூண்டார். நேராக நாயனார் இல்லத்திற்கு வந்தார். வாயிலிலே நின்று கொண்டு எம்பெருமான், பவதி பிக்ஷம் தேஹீ என்று குரல் கொடுத்தார். அடுப்படியில் வேலையாக இருந்த நாயனாரின் மனைவியார் வெளியே ஓடி வந்தாள். சிவனடியாரைக் கண்டு அகமும் முகமும் மலர வாருங்கள் என்று முகமன் கூறி உள்ளே அழைத்துச் சென்றாள்.

சுவாமி! என் கணவர் வந்துகொண்டே இருக்கிறார். அதற்குமுன் தேவரீரிடம், இந்த ஏழைக்கு ஒரு சிறு விண்ணப்பம். அம்மணீ! மங்களம் உண்டாகட்டும். விஷயத்தைச் சொல்வாய். அம்மையார் அடியாரிடம் நாயனாரின் சங்கல்பத்தைச் சொல்லி, சுவாமி! தாங்கள் தயவு செய்து ஊரைப் பற்றிக் கேட்டால் திருவாரூர் என்று மட்டும் சொல்லி விடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டாள். எம்பெருமான் குறுநகை சிந்த, அம்மணீ! எனக்குப் பொய் பேசத் தெரியாது. அதனால் நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். அவர் சாப்பிடும்போது கொடுவாளை வலது புறம் தானே வைத்திருப்பார். இன்று மட்டும் அதனை இடது புறம் வைத்துவிடு. மற்றவை நான் பார்த்துக் கொள்கிறேன். என்றார். அம்மையாரும் அதற்குச் சம்மதித்தார்கள். அதற்குள் நாயனாரும் உள்ளிருந்து வெளியே வந்தார். நாயனார், சிவனடியாரை வரவேற்று விருந்திற்கு எழுந்தருளச் செய்தார்.

இருவரும் இலை முன் அமர்ந்தார்கள். மனைவியார் உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். நாயனார் வழக்கம் போல் தமது கேள்வியைக் தொடங்கினார். சுவாமிக்குச் சொந்த ஊர் எது? அங்கிங்கெனாதபபடி எங்கும் இருப்பேன். ஆயினும் அடியேன் சொந்த ஊர் சுந்தரர் அவதரித்த திருவாரூராகும்! என்ன! திருவாரூரா? அடியார்களை அவமதிக்கும் அந்த அற்பன் பிறந்த ஊரில் பிறந்தவரா நீர்? உம்மை என்ன செய்கிறேன் பார் என்று வன்மொழி கூறினார். நாயனார் கண்கள் கோபத்தில் சிவந்தன. சட்டென்று வலது பக்கம் திரும்பி கொடுவாளை எடுக்க முயன்றார். அங்கு கொடுவாளை காணாது மனைவியை நோக்கினார். அவர்கள் பயத்துடன், இடது புறம் வைக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டு விட்டது என்று கூறினாள். நாயனார் சட்டென்று இடது பக்கம் திரும்பினார். இதற்குள் அடியார் எழுந்து வெளியே ஓடிவிட்டார்.

நாயனார் அடியாரைத் துரத்திக் கொண்டு ஓடினார். அடியார் ஓட, நாயனார் துரத்த இருவரும் ஓடி ஓடி திருவாரூரின் எல்லையை அடைந்து ஊருக்குள் வந்து சேர்ந்தனர். நாயனார் களைத்துப்போன நிலையில் நிலத்தில் விழுந்தார். அடியார் சிரித்துக்கொண்டே, நீர் இப்பொழுது திருவாரூர் எல்லையைக் கடந்து ஊருக்குள்ளே வந்து விட்டீரே என்றார். நாயனார் மனம் பதறிப் போனார். ஆத்திரத்தால் துடித்தார். தவற்றை உணர்ந்தார். கொடுவாளை எடுத்துத் தமது காலை வெட்டிக் கொண்டார். நாயனாரின் செயலைக் கண்டு சிவபெருமான் அதற்கு மேலும் பக்தனைச் சோதிக்க விரும்பவில்லை. ரிஷப வாகனத்தில் கமலாம்பாள் சமேதராய் காட்சி கொடுத்தார் திருவாரூர் தியாகேசப் பெருமானார்! தம்மை ஆட்கொண்டருளிய அடியார் எம்பெருமானே என்பதனை உணர்ந்த நாயனார்,

சிரமீது கரம் உயர்த்தி கண்களில் நீர்மல்க பக்தியால் பரமனைத் தொழுதார். எம்பெருமான், விறல்மிண்டருக்கு சுந்தரர் அடியார்கள் மீது கொண்டுள்ள ஒப்பற்ற பக்தியை உணரச்செய்து நாயனாருக்குப் பேரின்ப பெருவாழ்வு நல்கி அருளினார். இப்படி ஒரு வரலாறும் இந்த நாயனாரைப் பற்றி கூறப்படுகிறது! அடியார்களிடம் அளவிலாப் பக்தி பூண்டிருந்த விறல்மிண்ட நாயனார், திருக்கையிலையிலே, இறைவன் திருவடியைப் பிரியாது வழிபடும் சிவகணங்கட்குத் தலைவராகத் திகழும் திருவருளைப் பெற்றார்.

"வேறு பிறிதென் திருத்தொண்டத் தொகையால் உலகு விளங்கவரும்
பேறு தனக்குக் காரணராம் பிரானார் விறன் மிண்டரின் பெருமை
கூறும் அளவு என் அளவிற்றே? அவர் தாள் சென்னி மேற்கொண்டே
ஆறை வணிகர் அமர்நீதி அன்பர் திருத்தொண்டு அறைகுவாம்."

பாடல் விளக்கம்:


திருத்தொண்டத்தொகை கிடைக்கப் பெற்றதனால் உலகினர் யாவரும் விளங்கவரும் பெரும் பேற்றிற்குக் காரணமாகும் நம் முதல்வராகிய விறன்மிண்ட நாயனாரின் பெருமையை, என்னளவில் கூறும் அளவிற்கு அமையுமோ? அமையாது. அவர் திருவடியைத் தலைமேற்கொண்டு பழையாறையில் தோன்றிய வணிகராகிய அமர்நீதி நாயனாரின் திருத்தொண்டினை இனிக் கூறுவோம்.


🙏*சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம் சிவனே சரணாகதி

அப்பனே அருணாச்சலா உன் பொற் கழல் பின்பற்றி

🌹சித்தமெல்லாம்🌹
🌹சிவ மயமே🌹
🙇ஷிவானி  கௌரி


Monday, February 12, 2024

கிருஷ்ணரின் வம்சம் அழிந்த காரணம் .| Mahabharat

 கிருஷ்ணரின் வம்சம் அழிந்த காரணம் .

நாம் யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லை. பின், நமக்கு ஏன் இந்த கஷ்டத்தை ஆண்டவன் கொடுக்கிறான் என்ற சந்தேகம், நம்மில் பலருக்கும் ஏற்படும். ஏனெனில், செய்த தவறை நியாயப்படுத்துவது, மனிதனின் பிறவி குணம்.

ஆனால், இறைவன் அப்படிபட்டவன் அல்ல. செய்த தவறுக்கு, தண்டனை வழங்குவதில் அவன் தான் சரியான நீதிபதி. இதற்கு, மஹாபாரத்திலேயே உதாரணம் இருக்கிறது.

குருஷேத்திரம் யுத்தம் முடிந்துவிட்டது. ஹஸ்தினாபுரத்து அரசனாக, தருமன் முடிசூட்டிக் கொண்டு விட்டான். பாண்டவர்களின் வம்சத்தையே அழிக்க முயன்றதால், மன நிம்மதியின்றி, துரோணரின் மகன், அஸ்வத்தாமன் அலைந்து கொண்டிருந்தான்.

அவன் மனதில் ஒரு சந்தேகம் ஆட்டிப்படைத்தது. ‘என் தந்தை சத்தியவான்; செஞ்சோற்று கடன் தீர்ப்பதற்காகவே, துரியோதனனுக்கு ஆதரவாக போர் புரிந்தார். ஆனால், அவரை, பாண்டவர்கள், நான் இறந்ததாக பொய் சொல்லி, அநியாயமாக கொன்று விட்டனர். என் தந்தை செய்த தவறு என்ன’ என, மனதுக்குள்ளேயே புலம்பிக் கொண்டிருந்தான்.

ஒருநாள், கிருஷ்ண பரமாத்மாவை சந்தித்தான். கிருஷ்ணன் மீது அவனுக்கு கோபம் இருந்தது. அதனால், அவனிடமே, தன் மனதில் இருந்த சந்தேகத்தை கேட்டான். ‘என் தந்தையை பாண்டவர்கள் அநியாயமாக கொன்றதற்கு நீதானே காரணம். அவர் செய்த தவறு என்ன?’ என கேட்டான்.

கிருஷ்ணன் சிரித்து விட்டு, ‘செய்த பாவத்துக்கு யாராக இருந்தாலும், தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும்’ என்றான்.
‘அப்படி என்ன என் தந்தை பாவம் செய்துவிட்டார்’ கேட்டான் அஸ்வத்தாமன்.
கிருஷ்ணன் மீண்டும் சிரித்தான்.'உன் தந்தை, அனைத்து சாஸ்திரங்களையும் கற்றவர். ஆனால், ஏழையாக இருந்தார். அவரை, கவுரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் குருவாக, பீஷ்மர் நியமித்தார். அதன் பின் தான், அவரது வாழ்க்கையில் வளம் ஏற்பட்டது.

கவுரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் சகல, வில்வித்தை உட்பட அனைத்தையும் கற்றுக் கொடுத்தார் உன் தந்தை. ஒருநாள் அவரை ஏகலைவன் என்ற வேடுவர் இனத்தை சேர்ந்த சிறுவன் சந்தித்தான். ‘எனக்கும் வில்வித்தை கற்றுக் கொடுங்கள்’ என, உன் தந்தையிடம் கேட்டான்.

அரச குமாரர்களுக்கு சொல்லி தருவதால் ஏகலைவனுக்கு கற்று தர, துரோணர் மறுத்துவிட்டான். ஆனால், ஏகலைவன், உன் தந்தையை போல் மண்ணில் சிலை செய்து, குருவாக வழிபட்டு, வில்வித்தையை தானாக கற்றுக் கொண்டான்.

சில ஆண்டுகளுக்கு பின், ஒரு சந்தர்ப்பத்தில், ஏகலைவனின் வில் வித்தை திறமை, அர்ஜூனனுக்கு தெரிந்தது. அவன், துரோணரிடம் கோபம் அடைந்தான். ஏகலைவன் தானே கற்றுக் கொண்டதை அர்ஜுனனிடம் தெரிவித்து, அவனை உன் தந்தை சமாதானப்படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால், என்ன செய்தார். வில்வித்தைக்கு மிகவும் தேவையான, கட்டை விரலை, குரு காணிக்கையாக, ஏகலைவனிடம், உன் தந்தை கேட்டார். அவனும், மகிழ்ச்சியாக கொடுத்து, குரு பக்திக்கு நீங்காத புகழை பெற்றார்.

அரண்மனை பணி போய்விடும் என்ற சுயநலத்தில் உன் தந்தை, சுயநலமாக நடந்து கொண்டு, ஒரு வேடனின் திறமையை பாழடித்தார். ஏகலைவனுக்கு பெருமை கிடைத்தாலும், அவனது எதிர்காலம் வீணானதுக்கு, உன் தந்தை தான் காரணம்.

இந்த பாவம் தான், உன் தந்தையை, போர்களத்தில், மகன் இறந்ததாக எண்ணி ஏற்பட்ட சோகத்தில் மரணமடைய வைத்தது. துரோணர், தியானத்தில் இருந்த போது, அவரை திரவுபதியின் சகோதரரன் அநியாயமாக கொலை செய்தான்.

அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால், பாணடவர்கள், தங்களின் வாரிசுகளை இழந்தனர் என்று கூறி நிறுத்தினான் கிருஷ்ணன். உண்மைதான் என ஒப்புக் கொண்ட அஸ்வத்தாமன், ‘நீ நினைத்திருந்தால், இந்த யுத்தம் நடக்காமல் தடுத்திருக்கலாம். ஆனால் ஒரு வம்சமே அழிவதை வேடிக்கை பார்த்தாய். உனக்கு தண்டனை கிடையாதா ’என, கேட்டான் அஸ்வத்தாமன்.

‘ஏன் இல்லை .ஒரு வம்சம் அழிவதற்கு காரணமாக இருந்ததால், என் வம்சம் அழிவதை பார்த்த பின் தான் எனக்கு மரணம் ஏற்படும்’ என்றான் கிருஷ்ணன்.
உண்மைதான், யாதவ வம்சம் அழிந்து, காட்டில் தனிமையில் தியானத்தில் அமர்ந்திருந்த போது, மான் என நினைத்து வேடன் எய்த அம்பால் ,கிருஷ்ணின் உயிர் பிரிந்தது.
செய்த தவறுக்கு, தெய்வமாக இருந்தாலும் தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆம், உப்பு தின்னவன், தண்ணீர் குடித்து தான் ஆகனும்.வாழ்கவளமுடன்.

**சர்வம் கிருஷ்ணார்ப்பணம்**


Sunday, February 11, 2024

🙏இன்றைய கோபுர தரிசனம்🙏🕉அருள்மிகு பிராணேஸ்வரி, பிராணாம்பிகை தாயார் உடனுறை தர்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீஸ்வரர் திருக்கோவில்🕉

 🙏இன்றைய கோபுர தரிசனம்🙏🕉

திங்கட்கிழமை
 12.02.2024


 🕉அருள்மிகு பிராணேஸ்வரி, பிராணாம்பிகை தாயார் உடனுறை தர்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீஸ்வரர் திருக்கோவில்🕉


🔆திருநள்ளாறு,
காரைக்கால் மாவட்டம்,
புதுச்சேரி மாநிலம்

 

 

 

 


 

 

 

 

🔆எப்போதும் மனிதர்கள் தாங்கள் கஷ்டப்படும் காலங்களில் இறைவனை வழிபட்டு தங்களின் குறைகளை கூறி வழிபடுவர், ஆனால் தனது சக்தி மிகுந்த தாக்கத்தால் தெய்வங்களையே ஆட்டிப்படைத்தவர், நவகிரகங்களில் ஒரு மனிதனுக்கு ஆயுளை நிர்ணயிப்பவராகவும், எமனுக்கு சகோதரனும், காகத்தை வாகனமாக கொண்டவரான சனிபகவான்

🔆இந்த சனி பகவான் சனீஸ்வர பட்டதோடு வீற்றிருக்கும் “திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர்” கோவில், சுமார் 3000 ஆண்டுகளுக்குமேல் பழமையான கோவிலான இந்த ஆலயத்தின் இறைவனான சிவ பெருமான் தர்பாரண்யேஸ்வரர் என்றும் இறைவி பிராணேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறார்கள்

🔆இந்த கோவிலின் சிவபெருமான் தர்பை புல்லிலிருந்து தோன்றியதால் இவருக்கு “தர்பாரண்யேஸ்வரர்” என்ற பெயர் ஏற்பட்டது, நெடுங்காலத்திற்கு முன்பு வாழ்ந்த நளன் எனும் அரசன் தமயந்தி என்னும் பேரழகு வாய்ந்த இளவரசியை மனைவியாக அடைந்ததை பொறுக்க முடியாத தேவர்கள், சனீஸ்வர பகவானிடம் சென்று நளனை பிடித்து தகுந்த பாடம் கற்று கொடுக்குமாறு கூறினார்

🔆 சனீஸ்வர பகவானும் நளனை ஏழரை நாட்டு சனியாக பிடித்து கொண்டார், இதனால் அரசனாக இருந்த நளன் தனது மனைவி தமயந்தி மற்றும் குழந்தைகளை பிரிந்ததுடன் தனது நாடு, ராஜ்ஜியம் என அனைத்தையும் இழந்து ஏழரை ஆண்டு காலம் மிகுந்த துன்பங்களை அனுபவித்தான்

🔆ஏழரை ஆண்டுகள் கழித்து இந்த திருநள்ளாறு கோவிலுக்கு வந்த நளன், இக்கோவில் குளத்தில் நீராடி இங்கு வீற்றிருக்கும் சனி பகவானை வழிபட்ட பின் தான் முன்பு இழந்த தனது குடும்பம், நாடு , ராஜ்ஜியம் என அனைத்தையும் திரும்ப பெற்று இன்பமாக வாழ்ந்தான், நளன் நீராடிய தீர்த்தம் இன்றும் “நள தீர்த்தம்” என அழைக்கப்படுகிறது

🔆ஏழாம் நூற்றாண்டில் சமண மதத்தினரின் ஆதிக்கம் அதிகமிருந்த போது “திருஞானசம்பந்தர்” சைவ மதமே உண்மையானது என்று நிரூபிக்க இந்த கோவிலின் இறைவனான தர்பாரண்யேஸ்வரரை போற்றி இயற்றிய பதிகம் கொண்ட ஓலை சுவடிகளை தீயிலிட்ட போது அந்த ஓலைச்சுவடிகள் எரியாமல் அப்படியே இருந்ததால்!, அதை “பச்சை பதிகம்” என அழைத்தனர்

🔆 இதன் மூலம் சைவ மதம் உண்மையானது என நிரூபித்தார் திருஞானசம்பந்தர், தமிழகத்தில் மீண்டும் சைவம் தழைக்க ஆரம்பித்தது, இக்கோவிலின் சிறப்பே இங்கு நவகிரக நாயகர்களின் வலிமை வாய்ந்தவரும், ஆயுள்காரகனும் ஆன “சனி பகவானுக்கு” விஷேஷ சந்நிதி இருப்பதும், அவருக்கு ஆகம விதிப்படி பூஜைகளும் செய்யப்படுவதும் தான்

🔆 இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு தனது குறை நீங்க பெற்ற சனிபகவான் சனி என்ற பெயரோடு ஈஸ்வர பட்டத்தையும் சேர்த்து சனீஸ்வரன் என அழைக்கப்படுகிறார், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது பல லட்சக்கணக்கான பக்தர்கள் சனி பகவானை வழிபடுகின்றனர்

🔆 ஜாதகத்தில் “ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, மங்கு சனி” ஆகிய கெடுதலான சனி பகவானின் கோட்சாரம் பெறுபவர்கள் இக்கோவிலுக்கு வந்து எண்ணெய் தேய்த்து “நள தீர்த்தத்தில்” நீராடி சிவ பெருமானையும், சனீஸ்வரரையும் வழிபட சனி பகவானால் தீமையான பலன்கள் ஏற்படாமல் நன்மைகள் நடக்க தொடங்கும்🙏🕉

சிவ தாண்டவ ஸ்தோத்திரம் உருவான கதை

 சிவ தாண்டவ ஸ்தோத்திரம் உருவான கதை சிவ தாண்டவ ஸ்தோத்திர பாடலுக்கு பின்னால் இருக்கும் வரலாறு… . ராவணன் ஆண்டு வந்த இலங்கைக்கு சிவபெருமானை அழைத...